Archives: செப்டம்பர் 2025

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள்.  
இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25). 
நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.  

கொடுப்பவரின் இருதயம்

எங்கள் பழைய வீட்டை காலி செய்யும் கடைசி நாளில், எனது நண்பர் தனது நான்கு வயது மகள் கின்ஸ்லீயை எங்களுக்கு வழியணுப்ப அழைத்துவந்தார். “நீங்கள் போவதை நான் விரும்பவில்லை” என்று கின்ஸ்லீ கூறினாள். நான் அவளைக் கட்டிப்பிடித்து, என்னிடமிருந்த ஒரு கையால் வர்ணம் பூசப்பட்ட கைவிசிறி ஒன்றை அவளுக்கு பரிசாகக் கொடுத்தேன். “என் ஞாபகம் உனக்கு வரும்போதெல்லாம், இந்த கைவிசிறியைப் பயன்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” என்றேன். அவள் என்னுடைய பையில் இருந்த வேறு ஒரு கைவிசிறியைப் பார்த்துவிட்டு, அதைத் தரும்படிக்கு கேட்டாள். “அது உடைந்துவிட்டது” என்று சொன்னேன். “இருப்பதிலேயே சிறந்த கைவிசிறியை உனக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று அவளிடம் சொன்னேன். அவளுக்கு சிறந்த கைவிசிறியைக் கொடுத்ததில் நான் வருத்தப்படவில்லை. அவளுடைய மகிழ்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பின்பாக ஒரு நாள், நான் உடைந்த கைவிசிறியை வைத்திருப்பதை கின்ஸ்லீ வருத்தத்துடன் அவளுடைய தாயாரிடம் சொல்லியிருக்கிறாள். அவர்கள் புதிய ஊதா நிற கைவிசிறியை எனக்கு பரிசாக அனுப்பிவைத்தனர். எனக்கு தாராளமான பரிசை கொடுத்த பின்பு கின்ஸ்லீ மகிழ்ச்சியடைந்தாள். நானும் மகிழ்ச்சியடைந்தேன்.  
சுய திருப்தி மற்றும் சுய பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகில், இதயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக நாம் பதுக்கி வைக்க ஆசைப்படலாம். இருப்பினும், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் சொல்லுகிறது. அதிகமாய் செல்வத்தை ஈட்டக்கூடியதே செழிப்பு என்று நம்முடைய கலாச்சாரம் வரையறுக்கிறது. ஆனால் “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 25) என்று வேதம் சொல்லுகிறது.  
தேவனின் வரம்பற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பும் பெருந்தன்மையும் தொடர்ந்து நம்மை புத்துணர்வடையச் செய்கிறது. எல்லாவற்றையும் தாராளமாய் அள்ளிக்கொடுப்பதில் சோர்ந்துபோகாத தேவனை நாம் அறிந்திருக்கிறபடியால், நாமும் தாராளமாய் கொடுத்து, கொடுப்பவர்களின் கூட்டத்தை அதிகரிக்கச்செய்யலாம்.  

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்! 
உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார்.  
குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம்.  

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

பிரத்யேகமான கதறல்

ஒரு குழந்தை அழுகிறதென்றால், அது களைப்பாய் இருக்கிறது அல்லது அதற்கு பசிக்கிறது என்று அர்த்தமல்லவா? பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் மற்ற பிரச்சினைகளுக்கு முக்கியமான தடயங்களை கொடுக்கக்கூடும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிய, அவைகளின் அழுகுரலில் இருக்கும் சுருதி, ஓசை ஆகியவைகளை அடிப்படையாய் வைத்து கணினியின் துணையோடு கண்டறியும் மருத்துவ செயல்பாடுகள் அமுலில் உள்ளது.  
தேவன் தம்முடைய ஜனங்களின் வித்தியாசமான கூக்குரலைக் கேட்டு, அவர்களுடைய இருதயத்தின் நிலையைத் தீர்மானிப்பார் என்றும் கிருபையுடன் அவர்களுக்கு இரங்குவார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதேயா, தேவனிடம் ஆலோசனைக் கேட்பதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடியது (ஏசாயா 30:1-7). அவர்கள் தொடர்ந்து தேவனிடத்தில் முரட்டாட்டம் செய்தால், தேவன் அவர்களுக்கு தோல்வியையும் அவமானத்தையும் கொண்டுவருவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அவர்களின் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்க” (வச. 18) தீர்மானித்தார். அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசத்துடன் மன்றாடி கதறினாலொழிய அவர்களுக்கு மீட்பு வராது. கர்த்தருடைய ஜனங்கள் அவரிடத்தில் கதறி அழும்போது, அவர் அவர்களுடைய பாவத்தை மன்னித்து அவர்களின் ஆவிக்குரிய வலிமையை புதுப்பிப்பார் (வச. 8-26).  
இதே விஷயம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்முடைய மனந்திரும்புதலின் கதறல் சத்தத்தை பரலோகப் பிதா கேட்கும்போது, அவர் நம்மை மன்னித்து, அவர் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கிறார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார். 

 

வேலையில் மனநிறைவு

தங்கள் பணி அர்த்தமுள்ளதாக மருத்துவர்கள் உணருகிறார்களா என்பதை அறிந்துகொள்ள, வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இரண்டு ஆய்வுகளை மேற்கொண்டனர். இரண்டு ஆய்வுகளும் பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் பணியில் மன அழுத்தம் இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவே கருதுவதைக் கண்டறிந்துள்ளனர். அவர்களின் பணி திருப்திக்கான காரணத்தைக் கேட்டபோது, அவர்கள் நிரந்தரமான வேலை, பொறுப்புணர்வு, சுதந்திரம், வீட்டுவசதி, சக ஊழியர்கள் அவர்களை உணர்ந்த விதம் மற்றும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்துவதற்கும், கற்பிப்பதற்கும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் கிடைத்த வாய்ப்புகள் போன்ற காரணங்களைச் சொன்னார்கள்.

பிரசங்கியின் ஆசிரியரும் வேலையின் அர்த்தத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அவர், "மனுஷன் சூரியனுக்குக் கீழே இருக்கிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?" (வ.22) என்று கேட்கிறார். நாம் நாள் முழுவதும் "அலுப்புடனும்" "துக்கத்துடனும்" வேலை செய்கிறோம், பின்னர் இரவிலும் நம் "மனதுக்கு இளைப்பாறுதலில்லை" (வ.23). வேலை "மாயையே" என்று அவர் முடிக்கிறார் (வ.23). இருப்பினும், மனுஷன் புசித்துக் குடித்து, தன்பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்திலும். அவனுக்கு ஒரு நன்மையுமில்லை இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது (வ.24) என்பதை உணர்கிறார். அவர் இல்லாமல் யாரால் உண்ண முடியும் அல்லது இன்பம் காண முடியும்? (வ.25). வீட்டிலோ அல்லது வெளியிலோ உடல் உழைப்பு அல்லது மன முயற்சியுடன் வேலை செய்வது ஒரு கெளரவம். நம்மில் பெரும்பாலோர் வேலை நாளின் முடிவில் திருப்தியைத் தேடுகிறோம். சிலர் இந்த திருப்தியைச் சேவை, பண ஆதாயம் அல்லது நட்பின் மூலம் கண்டடைய முயலலாம், இன்னும் பலர் வேலையைத் தேவன் கொடுத்த பாக்கியமென்று உணருமட்டும் வருத்தத்தோடு பிரயாசப்படுவார்கள் (ஆதியாகமம் 2:15). நாம் அதிருப்தி கொள்ளுகையில், நாம் தேவனிடம் செல்லலாம். ஏனெனில், எந்த வேலையும் நமக்கு முழு மனநிறைவை அளிக்காது என்பதுதான் உண்மை, ஆனால் நாம் செய்யும் வேலையில் மெய்யான அர்த்தத்தைக் கண்டறியத் தேவன் உதவுவார். ஆன் ஹரிகீர்த்தன்